திருவரங்கம் கோவில் சுவர் இடிந்து விழும்...அபாயம் அறநிலையத்துறையின் அலட்சிய போக்கு
ரிஷிவந்தியம்: திருவரங்கம் கோவில் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் சுற்றுசுவர் அமைப்பதில், அறநிலைத்துறையினர் தொடர்ந்து அலட்சியத்துடன் உள்ளனர். இதனால் மண் சரிவு ஏற்பட்டு, கோவில் சுற்றுசுவர் இடிந்து விழும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கத்தில் கிருத யுகத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த அரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலைவிட பழமைவாய்ந்த இக்கோவிலில், நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அரங்கநாதர் சிலை உள்ளது. புன்னியதலமாக உள்ள இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து பகுதிகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பின்றி வீணாகின்ற அவலநிலை நீடிக்கிறது. கோவில் வளாகத்தை சுற்றியுள்ள சுவர்களிலும் செடிகள் வளர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வப்போது கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இங்குள்ள மிகப்பெரிய அளவிலான தானியக்களம் பாழடைந்து வீணாகி வருகிறது. திருவிழாவின்போது, கோவில் சுற்று சுவருக்கு வர்ணம் பூசுவதில்கூட ஆர்வம் செலுத்தப்படவில்லை. இக்கோவில் அருகே குடியிருப்பு பகுதிகளின் நடுவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், குளம் அமைக்கப்பட்டு, இதன் ஒரு பக்கத்தில் மட்டும் கருங்கற்களால் சுற்று சுவர் கட்டப்பட்டது. தொடர்ந்து அறநிலைத்துறை சார்பில் இரு புறங்களில் சுவர் அமைக்கும் பணிகள் துவங்கி, ஆமை வேகத்தில் பணிகள் நடந்தன. பல ஆண்டுகளாகியும், பணிகள் முழுமை பெறாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை யால் குளத்தின் ஒரு புறத்தில் பலத்த மண் சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதி வீடுகளின் சுவற்றில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் சார்பில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவில் சுற்றுசுவர் அமைந்துள்ள இடத்திலும் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து, மண் சரிவு ஏற்பட்டால் கோவில் சுற்றுசுவர் இடிந்து விழும் அபாயநிலை உருவாகியுள்ளது. கோவில் குளத்தில் தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன் படுத்தி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று கோவி<லுக்கு வந்த பக்தர்கள், இந்த குளத்தை பார்த்து முகம் சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டது. விபத்து ஏற்படும் முன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுற்றுசுவர் கட்டவும், கோவில் சுவற்றில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, தூய்மைபடுத்தவும், அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.