உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை திறப்பு: காலை முதல் நெய்யபிஷேகம்!

சபரிமலை நடை திறப்பு: காலை முதல் நெய்யபிஷேகம்!

சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கியது.மாலை 5.00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் கோயிலை வலம் வந்த பின், மேல்சாந்தி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் 18 படி வழியாக இறங்கி சென்ற அவர் கோயில் முன்புறம் உள்ள ஆழி குண்டத்தில் தீ வளர்த்தார். தொடர்ந்து 18- படி வழியாக பக்தர்கள் ஏறி செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜைக்கு பின்னர் நடை அடைக்கப்பட்டு இரண்டு நாள் இடைவெளி ஏற்பட்டதால் நேற்று நடை திறந்த போது 18- படியேற நீண்ட வரிசை காணப்பட்டது.

மகரவிளக்கு கால பூஜைகள் 20 நாட்கள் நடைபெறும். ஜன.,15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல சீசன் தொடங்கிய போது தமிழகத்தில் பெய்த பெருமழையால், பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் மகரவிளக்கு காலத்தில் தமிழகத்தில் இருந்து அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜன., 18-ம் தேதி பகல் 12 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது. அவ்வாறு வரும் பக்தர்கள் நெய்தோணியில் நெய்யை சமர்ப்பித்து விட்டு, அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக வாங்கி செல்லலாம். ஜன.,19 இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !