புத்தாண்டை வரவேற்க கோவில்களில் விசேஷ பூஜை
கோவை : புத்தாண்டை வரவேற்கும் விதமாக, அனைத்து கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.
புத்தாண்டு தினத்தில், புது எண்ணங்கள் மலரவும், வசந்தத்தை வரவேற்கும் விதமாகவும், கோவில், தேவாலயம் உள்ளிட்ட புனித இடங்களுக்கு செல்வது வழக்கம். ஆண்டின் எல்லா நாட்களிலும், மன அமையும், நிம்மதியான வாழ்வும் அமைய, சிறப்பு வழிபாடுகள் எல்லா கோவில்களிலும் நடந்தன.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், விளக்குகள் புடைசூழ அலங்கரித்த முருகனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இங்கு, வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல், சந்தன காப்பால் அலங்கரிக்கப்பட்ட, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், அபிஷேகங்களுடன், அன்னதானமும் நடந்தது.
ராம்நகர், ஐயப்பா பூஜா சங்கத்தில், மக்கள் வாழ்வு மலரவும், உலக ஜீவராசிகளின் வாழ்வு சிறக்கவும், சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. இங்கு நடந்த, பெரிய அன்னதான விருந்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புலியகுளம் விநாயகர் கோவிலில், பழ அலங்காரத்திலும், பெரிய கடை வீதி, மாகாளியம்மன் கோவிலில், வெள்ளி சிம்மாசனத்திலும், ஈச்சனாரி, மகாலட்சுமி கோவிலில், உற்சவ மூர்த்திகளோடு அருள் பாலித்த தெய்வங்களை, பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களுடன் தரிசித்து, பரவசமடைந்தனர்.
மேலும், நள்ளிரவு முதல், தேவாலயங்களில் ஜெபக்கூட்டங்கள் நடந்தன. சிறப்பு ஆராதனைகளோடு, திருப்பலி நடந்தது. சி.எஸ்.ஐ., இமானுவல் சர்ச், புலியகுளம் அந்தோணியார் தேவாலயம், மைக்கேல் சர்ச் உள்ளிட்ட அனைத்து ஜெபக்கூடங்களிலும், சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இந்த புத்தாண்டில், கோபம், வஞ்சகம், ஆணவம் உள்ளிட்ட தீய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சகோதரத்துவம், அன்பு, பகிர்தலோடு தொடங்குவதாக அமையப்பட்டும் என்பதே, பலரின் வேண்டுதல்களாக இருந்தது.