மகரஜோதியையொட்டி புல்மேட்டில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்:கேரள ஏ.டி.ஜி.பி., ஆய்வு
கூடலுார்: சபரிமலையில் மகர ஜோதி அன்று, புல்மேடு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து கேரள ஏ.டி.ஜி.பி.,பத்மகுமார் ஆய்வு மேற்கொண்டார். சபரிமலையில் மகரஜோதி விழா நாளை மறுநாள் (ஜன. 15ல்) நடக்கிறது. இதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஜோதியை சபரிமலையில் இருந்தும், புல்மேடு, உப்புபாறை உள்ளிட்ட பகுதியில் இருந்தும் தரிசிக்கலாம்.கடந்த 2010ல் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது, புல்மேட்டில் கூட்ட நெரிச லில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். இச்சம்பவத்திற்குப் பின், புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.ஆம்புலன்ஸ் சர்வீஸ்இந்நிலையில் இந்தாண்டு மகரஜோதியையொட்டி புல்மேட்டில் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் அதிகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் ஆய்வு மேற்கொண்டார். 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கானம் முதல் புல்மேடு வரையுள்ள சாலையில் 150 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுகிறது. குமுளி யில் இருந்து புல்மேடு வரை அடிக்கடி சென்று திரும்பும் வகையில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரஜோதி நேரத்தில் புல்மேட்டிற்கு அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் புல்மேடு பகுதியில் போலீசார் ரோந்து சென்று கொண்டே இருப்பர். இவைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்து, மகரஜோதி விழா நேரத்தில் எவ்வித பிரச்னையும் இன்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, போலீஸ் உயரதிகாரிகளுக்கு அவர் அறிவுரை கூறினார்.