விஸ்வேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சிலை தயாரிப்பு
திருப்பூர் : ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, 63 நாயன்மார் சிலைகள், தயாராகி வருகின்றன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 18ல் நடக்கிறது.
இதையொட்டி நடைபெறும் கும்பாபிஷேக திருப்பணியில், புதிதாக கல் மண்டபம் கட்டப்பட்டு, 63 நாயன்மார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதில், நாயன்மார்கள் வேடம் தாங்கிய, அவதார சிற்பங்களாக அமைக்கப்படுகிறது. தமிழகத்தில், நாமக்கல் அடுத்த சேத்தமங்கலத்தில் உள்ள, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயத்தில் மட்டுமே, நாயன்மார்கள் பூமியில் அவதரித்த வேடம் தாங்கிய சிலைகள் உள்ளன. அதற்கடுத்ததாக, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், நாயன்மார்கள் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இதில், திருநீலகண்ட நாயனார் திருவோடு ஏந்தியும், அமர்த்தி நாயனார் தராசுடனும், இயர்பகை நாயனார் தலையில் கூடையுடனும், காரைக்கால் அம்மையார், கையில் மாங்கனி ஏந்தியவாறும் என, 63 நாயன்மார், பூவுலக வேடம் தாங்கி, சிலைகள் அமைக்கப்படுகின்றன. பெருந்தொழுவு அருகே உள்ள சிற்பக்கூடத்தில், இவை தயாராகி வருகின்றன. சிலைகள் தயாரானதும், தானிய வாசம், ஜல வாசம், சொர்ண மற்றும் பூ, பன்னீர் வாசம் செய்யும் வகையில், தொட்டியில் இட்டு, சிறப்பு பூஜை செய்யப்படும். வரும், 13ல், நாயன்மார் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. அதன்பின், கல் மண்டபத்தில் நாயன்மார் சிலைகள் அஷ்டபந்தன மருந்து சாத்தி, பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.