திருக்கோஷ்டியூரில் புஷ்ப யாகம்
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பின் புஷ்பயாகம் நடந்தது. இக்கோயிலில் பெருமாளுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பயாகம் நடந்துள்ளது. பின்னர் விடுபட்டு, தற்போது மீண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு யாகசாலையில் காப்புக் கட்டி யாகம் துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு உற்சவருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடந்தது. பெருமாள் சர்வ அலங்காரத்தில் தேவியருடன் ஏகாதசி மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து புஷ்ப யாகம் நடந்தது. மல்லிகை, பிச்சிப்பூ, செவ்வரளி, துளசி, பச்சை உள்ளிட்ட 12 வகையான மலர்கள்,இலைகளால் யாகம் நடந்தது. ஒவ்வொரு மலருக்கும் அர்ச்சனை,திருவாதாரணம்,தளிகை நடந்து யாகம் நடந்தது. பின்னர் உற்சவர் தென்னமரத்து வீதியில் புறப்பாடு நடந்தது. இயற்கை இடர்பாடுகளிலிருந்து பூமியை காக்க இந்த யாகம் நடத்தப்படுவதுண்டு. ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்தனர்.