அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ஈரோடு: ஈரோடு அங்காளபரமேஸ்வரி கோவிலில், ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு பேட்டை கீரக்காரவீதி, அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா, மார்ச், 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கோவில் கரகம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், காரைவாய்க்காலில் இருந்து பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. பரம்பரை தர்மகர்த்தா ஜெகநாதன் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடி, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு மூலவர், வெண்ணை காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு உற்சவர், மலர் பல்லக்கில் கோவிலில் தொடங்கி, மரப்பாலம், மணிக்கூண்டு, சத்திரோடு, வி.வி.சி.ஆர், நகர், வளையக்கார வீதி வழியாக வந்து, கோவிலில் நிறைவடைந்தது.