பழநியில் பங்குனி உத்திரதிருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற பழநி பங்குனி உத்திரதிரு விழா மார்ச்., 17 முதல் மார்ச்.,26 வரை நடக்கிறது. நேற்று மாலை பெரியநாயகியம்மன் கோயிலிருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டு, கிராமசாந்தி, கலசங்கள் வைத்து மயூரயாகம் சுவாமிகளுக்கு சிறப்புஅபிஷேகம் நடந்தது. வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடி திருஆவினன்குடிகோயில், வெளிப்பிரகாரம் சுற்றிவந்து பாதவிநாயகர் கோயில் வரை சென்று வந்தது. ஓதுவார்கள் வேதபாரயணங்கள்பாட காலை 10.50மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. அதன்பின் முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் சன்னதிவீதி, கிரிவீதியில் உலாவந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மார்ச்.,22ல் திருக்கல்யாணமும் மார்ச்.,23ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரோட்டம் மாலை 4.30மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.