மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இக்கோவிலில், பங்குனி உத்திர உற்சவம், கடந்த, 14ம் தேதி துவங்கி, தினமும் மாலையில், திருமஞ்சனம், நிலமங்கை தாயார் உள்புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம், 10ம் நாள் உற்சவமாக, திருக்கல்யாணம் நடந்தது. அன்று காலை, 10:00 மணிக்கு, ஸ்தலசயன பெருமாள், தாயார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேக திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் உலகுய்ய நின்ற நாயனார், தேவியருடன் மகா மண்டபத்தில், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். தாயாருக்கு, ஸ்ரீசுக்த ஹோமம் நடந்தது. மாலையில் சுவாமி, தேவியருடன் வீதியுலா சென்றார். அவர் கோவில் திரும்பியதும், இரவில் தாயாருடன் மாலை மாற்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.அதன் பின், சுவாமி, தாயார் சன்னிதி சென்று, சேர்த்தி சேவை உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.