உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி யுகாதி விழாவில் வினோதம்: பக்தர்கள் மீது நடந்த பூசாரி

கிருஷ்ணகிரி யுகாதி விழாவில் வினோதம்: பக்தர்கள் மீது நடந்த பூசாரி

கிருஷ்ணகிரி: தமிழக - ஆந்திர மாநில எல்லைப் பகுதி கிராமமான சிந்தகம்பள்ளியில், யுகாதி திருவிழாவையொட்டி, பக்தர்கள் மீது பூசாரி நடந்து செல்லும் வினோத வழிபாடு நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமம், ஆந்திர எல்லையில் உள்ளது. இந்த கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் யுகாதி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு யுகாதி விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை, முத்துமாரியம்மன் சுவாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய குடைகளால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை, கோவில் பூசாரி ஊர்வலமாக எடுத்து சென்றார். அப்போது, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் அந்த கரகத்துக்கு சிறப்பு பூஜை செய்ததுடன், வேண்டுதல் உள்ளவர்கள் அங்கேயே ஆடுகளை வெட்டி, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

பின்னர் ஆண், பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, அண்ணா நகரில் உள்ள காளி கோவில் அருகிலிருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை, ஈரத்துணியுடன் சாலையில் குப்புற படுத்தனர். அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்றார். பின், முத்துமாரியம்மன் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில், கரகத்துடன் பூசாரி இறங்கினார். அவரை தொடர்ந்து பக்தர்களும் இறங்கினர். பின் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் கைகளை மேலே துாக்கிக்கொள்ள, அந்த கைகள் மீது பூசாரி சாட்டையால் அடித்தார். விழாவில் கிருஷ்ணகிரி, வேலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !