ஆனூர் கந்தசாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
சென்னை, :காஞ்சிபுரம் மாவட்டம், ஆனுார் கிராமத்தில் உள்ள, கந்தசாமி கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.இக்கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, சாஸ்தா திருக்கோலத்தில், கந்த பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில், 2009 செப்டம்பர் மாதம் புனரமைக்கப்பட்டது.அந்த ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், தமிழ் புத்தாண்டு தினத்தன்று, புது நாணயங்களை, சுவாமி திருப்பாதத்தில் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக, ஆனுார் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டும், தமிழ் புத்தாண்டு தினத்தில், அதிகாலையிலே நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. புதிய நாணயங்களை சுவாமி பாதத்தில் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, சுவாமியின் பாதத்தில் வைத்து, சங்கல்பம் செய்யப்பட்ட நாணயங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.