மீனாட்சிக்கு சொக்கருடன் திருக்கல்யாணம்: மணக்கோலத்தில் சொக்கிய மரகதவல்லி!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. வைரத் திருமாங்கல்யத்துடன் மணக்கோலத்தில் மரகதவல்லி எழுந்தருளினார்.மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஏப்.,17ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்றுமுன்தினம் திக்கு விஜயம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாள் நேற்று காலை 6.00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர்.கன்னி ஊஞ்சல் உற்சவம்: கோயிலுக்குள் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளுக்கு வந்தனர். நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து, முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் உற்சவம் நடந்தது. உலகை ஆளும் சிவபெருமான், உமையாள் திருக்கல்யாணத்தை காண, திருக்கல்யாண மண மேடைக்கு நேற்று காலை 8.15 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினர். வெண்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், பச்சைப்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர்.
தங்கை திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பதற்காக, திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார்.திருக்கல்யாணம்: ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓத, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் எழுப்ப, நாதஸ்வரம் மேளதாளம் முழங்க, திருக்கல்யாண யாகசாலை பூஜைகள் காலை 8.30 மணிக்கு துவங்கின. அம்மன் பிரதிநிதியாக சிவா பட்டர், சுவாமி பிரதிநிதியாக செந்தில் பட்டர் இருந்தனர். காப்பு கட்டிய சந்திரசேகர பட்டர், ஸ்தானிக பட்டர்கள் திருக்கல்யாண பூஜைகளை நடத்தினர்.மீனாட்சி, சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்துப்படி நடந்தது. ஏலக்காய், வெட்டி வேர் மாலைகள் சூட்டப்பட்டன. அம்மன், சுவாமி பிரதிநிதிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின் மூன்று முறை திருமண மாலைகளை மாற்றி கொண்டனர். வைர திருமாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து காலை 8.54 மணிக்கு வேதமந்திரம், கெட்டி மேளம் முழங்க உமையாள் கழுத்தில், உலகை ஆளும் சிவபெருமான் வைர மாங்கல்யத்தை அணிவித்தார். சர்வ விருது களுடன் தீபாராதனைகள் நடந்தன. பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினர். இரவு 7.30 மணிக்கு யானை - ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், சுவாமி எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பூப்பல்லக்கு நடந்தது.இந்து அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி கலந்து கொண்டார். தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நா.நடராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.
வடம் பிடித்தால் இடம்: சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலை 6.00 மணிக்கு கீழமாசி வீதி தேர்முட்டியில் துவங்குகிறது. சப்தாவர்ண சப்பரத்தில் அமன், பிரியாவிடையுடன் சுவாமி மாசி வீதிகளில் எழுந்தருளும் தேரோட்டம் நடக்கிறது.தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில்,திருக்கல்யாணத்தை 7,500 பேர் தரிசனம் செய்தனர்.
மணமேடையில் ஏசி வசதி: செய்யப்பட்டது. போலீசாரின் பணி சிறப்பாக இருந்தது. தனியார் அமைப்பு சார்பில் திருக்கல்யாண விருந்து நடந்தது. திருத்தேருக்கு வடம் பிடித்தால் சொர்க்கத்தில் இடம் பிடிக்கலாம். எனவே திருத்தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும், என்றார்.
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்!
* தெற்கு கோபுரம் வழியாக கட்டணமில்லா தரிசனம் செய்வோர், மேற்கு, வடக்கு கோபுரம் வழியாக கட்டண தரிசனம் செய்வோர் என 9,500 பேர் அனுமதிக்கப்பட்டனர்.* காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. காலை 7.00 மணிக்கு மேல் ரூ.500, ரூ.200 டிக்கெட் பெற்றோர் அனுமதிக்கப்படவில்லை.* பிர்லா தங்கும் விடுதியில் ஆன் லைன் டிக்கெட் விற்பனை காலை 7.00 மணியுடன் முடிக்கப்பட்டது. ரூ.500, ரூ.200 டிக்கெட் விற்காமல் தேக்கமடைந்தன.* திருக்கல்யாண மணமேடை ரூ.10 லட்சம் மலர்கள், வெட்டி வேர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.*திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் தங்களின் திருமாங்கல்ய மஞ்சள் கயிற்றை புதுப்பித்து மாற்றிக் கொண்டனர். * கோயில் சார்பில் 30 ஆயிரம் பேருக்கு, திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டது.* 20 இடங்களில் அகன்ற திரைகளில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பானது.* சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் திருக்கல்யாண விருந்து நடந்தது.* பக்தர்கள் ரூ.100, ரூ.50 செலுத்தி திருக்கல்யாண மொய் காணிக்கை செலுத்தினர்.