உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதிக்கு தேசிய விருது

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதிக்கு தேசிய விருது

சென்னை: மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதிக்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய அரசின், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மூலம், முதல் முறையாக, சி.எஸ்.டி., மற்றும் சூரிய சக்தி மூலம் செய்யப்படும் சமையலுக்கான சிறப்பு விருது - 2016ஐ, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதிக்கு, ஏப்., 29ல் வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு, நாடு முழுவதும் இருந்து, 10 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. விருதை, மின்சாரம், நிலக்கரி மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல், டில்லியில் வழங்கினார். விருதை பெற்ற, ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் செயலர் சுவாமி சத்ய ஞானாந்தர் இதுகுறித்து கூறியதாவது:

பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கவும், சுத்திகரிக்கவும் அதிக செலவு ஆகிறது. மேலும், அப்பொருட்களை எரிப்பதால், வெளியாகும் மாசு, பூமியை பாதிக்கிறது. அதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெற வேண்டும். அந்த குறிக்கோளுடன், சென்னை, மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மாணவர் விடுதியில், சூரிய ஒளியின் திசையை நோக்கி திரும்பும், தானியங்கி சூரிய ஒளிப்பலகைகளை அமைத்தோம். சூரிய ஒளி மூலம் பெற்ற வெப்ப ஆற்றலை, நீருக்குள் செலுத்தி, அதிக அடர்த்தியான நீராவியைப் பெற்று, அதன் மூலம், மாணவர் விடுதிக்கு உணவுப் சமைக்கிறோம். இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட பின், காஸ் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது. மாதம், 85 ஆயிரம் ரூபாயும் மிச்சமாகிறது. சூரிய ஒளியால் எந்த மாசும் ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !