உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை: விடியும் வரை நகர்வலம்

கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை: விடியும் வரை நகர்வலம்

பள்ளிப்பட்டு கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, பள்ளிப்பட்டு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று இரவு, நகரின் அனைத்து வீதிகளுக்கும் அம்மன் உலா எழுந்தருளினார். பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ளது கொள்ளாபுரியம்மன் கோவில். கோடையில், அம்மனுக்கு ஜாத்திரை திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, நேற்று காலை, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். நகரத்தின் அனைத்து வீதிகளுக்கும் மேள தாளங்கள் முழங்க, அம்மன் வலம் வந்தார். ஊர்வலத்தின் போது பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம் என, கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, அம்மன் கோவிலை வந்தடைந்தார். கொள்ளாபுரியம்மன் ஜாத்திரையை ஒட்டி, கடந்த வாரம் நிப்புல போலேரம்மன், செல்லாலம்மன் கோவில்களில், பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !