12 ஆண்டுகளுக்கு பின் அம்மன் கோவில் விழா
தலைவாசல்: தலைவாசல் அருகே, 12 ஆண்டுகளுக்கு பின், திரவுபதி அம்மன் விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர். தலைவாசல், கோவிந்தம்பாளையம் ஊராட்சி, திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசியில் திருவிழா நடத்தப்படும். பல்வேறு காரணங்களால், கடந்த, 12 ஆண்டுகளாக, திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த, 24ம் தேதி மலர்வாக்கு கோரும் நிகழ்ச்சியுடன், விழா தொடங்கியது. காப்பு கட்டுதல், அறுத்த மாங்கனி பொருத்துதல் என, தினம் ஒரு நிகழ்ச்சி என நடந்தது. அதில், 17ம் நாளான நேற்று மதியம், 12 மணியளவில் அரவாண் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து அம்மன், அர்ச்சுணன், வீமன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகள், தேரில் ஊர்வலம் சென்றனர். மதியம், 3 மணியளவில், விழுப்புரம், சேலம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.