வங்கனூரில் பிரம்மோற்சவம்: பவுர்ணமியில் கோபுர தரிசனம்
ஆர்.கே.பேட்டை:வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று அதிகாலை, உற்சவர் பெருமாள், கோபுர வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான, வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஐந்தாம் நாள் உற்சவமாக, நேற்று அதிகாலை, கருட சேவை நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், கருட வாகனத்தில் கோபுர வாசலில், பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். பவுர்ணமி நிலவொளியில் பெருமாளை கோபுர வாசலில் தரிசனம் செய்த பக்தர்கள், விண்ணதிர, கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். இரவு 7:00 மணிக்கு, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று குதிரை வாகனத்தில் உலா வருகிறார். நாளை தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.