ஆடிப்பெருக்கு, அமாவாசை விழா: கோவை கோவில்களில் விரிவான ஏற்பாடு
கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரன் படித்துறையில் மக்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து படையலிட்டு வழிப்பட்டனர்.
ஆடிப்பெருக்கு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி, கோவையில் பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது. ’மேலைச்சிதம்பரம்’ என்றழைக்கப்படும், பேரூர் பட்டீசுவரர் கோவில் முக்தியளிக்கும் கோவில்களுள் ஒன்று. ஆடிஅமாவாசை நாளில், ’காஞ்சிமாநதி’ என்றழைக்கப்படும் நொய்யலில் நீராடி, மூதாதையர்களுக்கு, திதி, தர்பணம் செய்து, பட்டீசுவரரை வழிபாடு செய்தால் உரிய பலன்கள் போய் சேரும் என்பது ஐதீகம். வழக்கமாக நொய்யலில் தண்ணீர் பெருக்கெடுக்கும் என்று நம்பி வரும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றமே மிஞ்சும். அதனால் அறநிலையத்துறை, இந்த ஆண்டு, கோவிலைச்சுற்றி, ஐந்து லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்கிறது.
கோவில் நடை வழக்கமாக காலை 6:00 மணிக்கு திறக்கப்படும். ஆடி அமாவாசையையொட்டி, இன்று காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வழக்கமாக நடைபெறும் நான்கு கால பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும் பாதுகாப்புப்பணியில், ஊர்காவல்படையினர், பேரூர் போலீசார், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறநிலையத்துறையில் பணிபுரியும் மற்ற பணியாளர்களும் பேரூர் கோவிலில் கூடுதல் பணி மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர். ஆடிப்பெருக்கை ஒட்டி அம்பாள் மற்றும் படித்துறையில் உள்ள அரசமர விநாயகர், நாகர் சன்னிதானம், கனகசபையில் வீற்றிருக்கும் சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜரை தரிசிக்க வருகை தரும், புதுமண தம்பதிகள் எளிதாக சுவாமியை தரிசிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் செயல்அலுவலர் சரவணன் கூறுகையில், ”கோவில் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார். மருதமலை கோவில் துணை கமிஷனர் பழனிக்குமார் கூறுகையில், ”மருதமலைக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப, தரிசனத்தை விரைவு படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.