ஆடி அமாவாசை: வீரராகவர் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம்
திருவள்ளூர்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஒவ்வொரு அமாவாசைதோறும் பக்தர்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று, ஆடி அமாவாசை என்பதால், நேற்று முன்தினம், இரவு முதல், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின், அங்குள்ள ஹிருதாப நாசினி குளத்தில், புனித நீராடி, குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், நேற்று, ஆடிப்பெருக்கும் சேர்ந்து வந்ததால், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், குளத்தில் புனித நீராடி வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, வீரராகவ பெருமாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின், சிறப்பு அலங்காரம் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை தரிசனம் செய்தனர்.