பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா
பெ.நா.பாளையம் : ஆடிப்பூரத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடந்தன. ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திர திருநாளன்று, ஆண்டாள் பிறந்த தின விழா, பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கும், ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஆண்டாள் மற்றும் பாகவத கோஷ்டியினர் திருப்பாவையின், 30 பாசுரங்களை பாடி, ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதே போல, இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், திருமலைநாயக்கன்பாளையம் மற்றும் நாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், காளிபாளையம் திருமலைராயர் பெருமாள் கோவில், பழைய புதுார் ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பிறந்த தின சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.