வெள்ளத்து மகமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை வெள்ளத்து மகமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. கோவிலில், கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி மாத திருவிழா துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 12ம் தேதி செடல் உற்சவம், திருத்தேர் புறப்பாடும், 13ம் தேதி காலை 7:30 மணிக்கு காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து பெண்கள் 108 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து 8:40 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 11:30 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு அம்மன் வீதியுலாவும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
பெண்ணாடம்: இறையூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, 14ம் தேதி காலை 8:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம், 8:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. 9:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, பால் குடம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பகல் 11:30 மணியளவில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வழிபட்டனர். சேத்தியாத்தோப்பு: ஆனைவாரி கிராமத்தில் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் 20ஆம் ஆண்டு பால்குட ஊர்வலம் விமர்சியாக நடந்தது. அதிகாலை நல்ல தண்ணீர் குளத்தில் சக்திகரகம் ஜோடிக்கப்பட்டு, காவடி, பெண்கள் 108 பால்குடத்துடன் கிராமத்தில் உள்ள வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.