சதுர்த்திக்காக இசை விநாயகர் சிலை மானாமதுரையில் அறிமுகம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சதுர்த்திக்காக இசை வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர் சிலைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தியையொட்டி, மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரை அடி முதல் 6 அடி வரை தயாரிக்கின்றனர். உயரத்திற்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.25 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. கல்யாண விநாயகர், பன்முக விநாயகர், சங்கு விநாயகர் போன்ற வடிவங்களில் ஏற்கனவே சிலைகளை தயாரித்து வந்தனர். இந்தாண்டு முதன்முதலாக இசை வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர் சிலைகளை அறிமுகம் செய்துள்ளனர்.
இதில் தபேலா, மத்தளம், நாதஸ்வரம், ஜால்ரா ஆகிய 4 இசை வாத்தியங்களை வாசிப்பது போன்றும், சயன வடிவிலும் விநாயகர்களை தயாரிக்கின்றனர். இந்த 5 சிலைகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விலை நிர்ணயித்துள்ளனர். இவற்றிற்கு காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மாசு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை களிமண்ணிலேயே செய்கிறோம். இதனால் மானாமதுரை சிலைகளுக்கு எப்போதும் கிராக்கி உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்திக்கு பல லட்சம் சிலைகள் தமிழகம் முழுவதும் அனுப்புகிறோம். இந்த ஆண்டு புதிதாக இசை விநாயகர்களை அறிமுகம் செய்துள்ளோம், என்றனர்.