உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் சுவாமி தரிசனம்: 5 மணி நேரம் காத்திருப்பு

பழநியில் சுவாமி தரிசனம்: 5 மணி நேரம் காத்திருப்பு

பழநி: பழநியில், சுவாமி தரிசனத்திற்காக, ஐந்து மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். தமிழகத்தில், பழநி மலைக்கோவிலில் மட்டுமே, ரோப் கார், வின்ச்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டு பராமரிப்பு பணிக்காக, ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, கோவிலில் குவிந்த பக்தர்கள், வின்ச்களில் அதிகளவு பயணம் செய்தனர்.இதனால், வின்ச் நிலைங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. மூன்று மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் மலைக்கு சென்றனர். அங்கு, பொது தரிசன வழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவர் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

முடி கட்டணம் அதிகரிப்பு: பழநி மலை கோவிலில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், முடி காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு கட்டணமாக, 10 வசூலிக்கப்பட்டு, நாவிதர்களுக்கு, ஐந்து ரூபாய் வழங்கப்படுகிறது.ஆயினும், அவர்கள், பக்தர்களிடம், தலா, 50 முதல், 100 வரை வசூலிக்கின்றனர். இது தொடர்பாக புகார்கள் வந்ததால், முடி காணிக்கை கட்டணம், 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், நாவிதர் பங்கு, 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் புகாரை தவிர்ப்பதற்காக, 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேல், கூடுதலாக வசூல் செய்தால், பக்தர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !