கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தேர் பழுது பார்க்கும் பணி துவக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவை ஒட்டி, திருவீதி உலா வரும் பஞ்ச மூர்த்திகள் தேர் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவர். அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா, வரும் டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில் கொடியேற்றம் முதல் மஹா தீபம் ஏற்றப்படும் முக்கிய திருவிழா நடக்கும், பத்து நாட்களும், காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கும். திருவிழாவின், ஏழாம் நாளில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து செல்லும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். இதற்காக, வீதி உலா வரும் தேர்களின் சக்கரம் பழுது பார்த்தல், வண்ணம் தீட்டுதல், மற்றும் சேதமடைந்த மரப்பொம்மைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கும். மேலும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வரும், 63 அடி உயர மஹா ரத சக்கரத்தை, பெல் நிறுவன இன்ஜினியர்களை கொண்டு ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த பின்பே, மஹா ரதம் வீதி உலா வரும். அதற்கான சான்றிதழ் பெறும் பணிக்காக, தேர் பழுது பார்க்கும் பணி துவங்கியுள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.