உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

திருப்பூர் :சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா, நேற்று துவங்கியது. காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. சுப்ரமணி சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், காப்பு கட்டி விரதம் துவங்கினர். மலைக்கோவிலை வலம் வந்து, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவிலில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார். ஆறு நாள்களுக்கு இங்கு அருள்பாலிக்கும் சுப்ரமணியருக்கு, தினமும், காலை, 10:30 மற்றும் மாலை, 4:00க்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா , வரும், 5ம் தேதி மாலை, 5:00க்கு, நடக்கிறது. 6ம் தேதி, காலை 10:00க்கு, சிறப்பு அபிஷேக பூஜையும்; மாலை, 6:00 க்கு, சுவாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. 7 ம் தேதி, சுவாமி, திருமலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், ஊதியூர் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், கருமத்தம்பட்டி விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், திரிசதை அர்ச்சனை, சத்ரு சம்ஹார ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !