மோகனூர் காவிரி ஆற்றில் மழை வேண்டி வர்ண ஜபம்
மோகனூர்: மோகனூர் காவிரிக்கரையில், சந்தியா வந்தன துறையில் (குட்டுக்காடு), சிருங்கேரி சங்கரமடம் சார்பில், மழை வேண்டி சிறப்பு வர்ண ஜபம் நேற்று நடந்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கவும், அனைத்து ஆறு, குளம், குட்டை, ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கவும், சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதி சுவாமிகளின் அருளாணைப்படி, தமிழகத்தில் உள்ள, காவிரி ஆறு பாயும் டெல்டா பகுதிகளில், ஒரு லட்சம் தடவை சிறப்பு வர்ண ஜபம் நடத்தப்படுகிறது. மோகனூர் காவிரி கரை சந்தியா வந்தன துறையில், சிறப்பு வர்ண ஜபம் நடந்தது. இதை, காவிரி ஆற்றில் இறங்கி அமர்ந்தபடி, பத்தாயிரத்து எட்டு முறை ஜபித்து வழிபட்டனர். தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், மழைவேண்டி, 108 முறை மந்திரங்களை கூறி வழிபட்டனர். ஏற்பாடுகளை, மோகனூர் சிருங்கேரி சங்கர மடத்தின் நிர்வாகி அஜிதன் உள்ளிட்டோர் செய்தனர்.