உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் லீலை நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கோயிலில் அக்., 31 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீர், சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சண்முகார்ச்சனை, உச்சிகாலை பூஜை முடிந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

சூரசம்ஹாரம்: சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல, அவர்களை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. யானைமுகம், சிங்கமுகம், ஆட்டுத்தலை உட்பட பல்வேறு உருவங்களில் சூரன் மாறி மாறி செல்ல இறுதியில் சுவாமி, சூரனை விரட்டி சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு சூரசம்ஹார புராண கதையை, பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார். உற்சவர் சன்னதியில் சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றி, தீபாராதனை முடிந்து, பூச்சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். கோயிலில் ஆறு நாட்களாக தங்கி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், தேரின் வடம் பிடித்து இழுக்க கிரிவீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். மாலை மூன்று மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !