திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி, நேற்று, கல்யாண உற்சவர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா, கடந்த மாதம், 31ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, தினமும், காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, உற்சவர் சண்முகபெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. நேற்று, காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில், கல்யாண உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கல்யாண சீர்வரிசையை அரக்கோணம் எம்.பி., அரி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் மலைக்கோவில் வளாகத்தில் இருந்து காவடி மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின், கல்யாண உற்சவருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.