சிதம்பரத்தில் திருவாசக முற்றோதல் சிவனடியார்களின் ஆன்மிக ஊர்வலம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருவாசக முற்றோதலையொட்டி சிவனடியார்களின் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவனடியார்கள் திருக்கூடம் அமைப்பு சார்பில் சிவனடியார்களின் மாணிக்கவாசகரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. இதனையொட்டி சிவனடியார்களின் ஆன்மிக ஊர்வலம் சிதம்பரம் நான்கு ரதவீதிகளில் நடந்தது. ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் சிலையுடன் சிவனடியார்கள் திருக்கூடம் அமைப்பாளர் தாமோதரன் தலைமையில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் மேள தாளங்களுடன் திருவாசகம் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் சென்ற சிவனடியார்கள் சாலையை அடைத்தபடி சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அதனால், சிவனடியார்களை சாலையில் ஒரு பகுதியில் ஊர்வலமாக அனுப்ப போலீசார் முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆன்மிக வாதிகள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதனால் ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.