பழநி கோயில் ரோப் கார் வயது 12!
பழநி: மலைக்கோயில் ரோப் கார் துவங்கி 12 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதன் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு ஆண்டிற்கு ரூ. பலகோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் முதன்மை ஆன்மிக சுற்றுலா தலமான பழநிமலை ஞான தண்டாயுதபாணி சுவாமி தரிசனம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக வெளி மாநிலத்தவர்கள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையேயும் அதிக பிரசித்தம் பெற்றது. இதனால் பழநி மலைக்கோயில் உண்டியல் மூலம் மட்டுமே மாதம் சராசரியாக ரூ.ஒருகோடிக்கு மேல் வசூலாகிறது.
ரோப் கார் குதுாகலம்: தமிழகத்தில் உள்ள மலைக் கோயில்களில் ரோப்கார்(கம்பிவட ஊர்தி), வின்ச்(மின்இழுவை ரயில்) ஆகியவற்றில் பயணிக்கும் வாய்ப்பு பழநியில் மட்டுமே உள்ளது. மலைக் கோயில் மேற்குகிரி வீதியில் இருந்து 3 வின்ச்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் 8 நிமிடங்களில் மலைக்கு சென்று விடலாம். அதனைவிட வேகமாக வசதியாக மூன்றே நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லும் வகையில் கடந்த 2004 நவ.,3ல் ரோப்கார் துவக்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு மணிநேரத்தில் 800 பேர் வரை மலைக்கோயிலுக்கு சென்று வந்தனர். ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே திட்டச் செலவுத்தொகையான ரூ.4.5 கோடியை வருமானமாக ஈட்டியது. தினமும் பராமரிப்பு: 2008ல் ஏற்பட்ட விபத்தில், ரோப்கார் பெட்டிகள் அறுந்து விழுந்தன. இதில் ஆவின் மேலாளர் உட்பட 4 பேர் பலியானார்கள். அதன்பிறகு, பெட்டிகளில் ஆட்கள் முழுமையாக நிரம்பி இருக்கும்படி செய்வதில்லை. பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்போது மொத்தம் 8 பெட்டிகளில் (16+13) 29 பேர் வீதம் ஒரு மணி நேரத்தில் 400 பேர் ரோப்காரில் பயணம் செய்கின்றனர்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. தினமும் பகல் 1.30மணி முதல் பகல் 2.30மணிவரை பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டு வெறும் பெட்டிகளைக் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன்பின் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. இதேபோல ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒருநாளும், ஆண்டிற்கு ஒரு மாதம்வரை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோயில் கீழ்தளத்தில் இருந்து 305 மீட்டர் நீளத்தில் இருபுறமும் கம்பிவடக்கயிறு செல்கிறது. அவை மேல்தளத்தில் இரண்டு இரும்பு கோபுரங்கள் (டவர்) பொருத்தப்பட்டு கம்பிவடக்கயிற்றில் தலா நான்கு வீதம் எட்டு பெட்டிகள் பொருத்தப்பட்டு மோனோ கேபிள் ஜிக்பேக் முறையில் 150 நிமிடத்தில் பெட்டிகள் மேலும், கீழும் வந்தடையுமாறு ஏற்பாடு செய்துள்ளனர். கீழ்தளத்தில் இருந்து ஆப்ரேட்டர் மூலம் ரோப்கார் இயக்கப்படுகிறது.
குட்டீஸ்களை குஷிபடுத்த பூங்கா: ரோப்காரில் பயணம் செய்யும்போது பழநி நகரின் அழகையும், சுற்றியுள்ள கழனிகளின் (வயல்வெளி) அழகையும் ரசிக்கலாம். இதன் காரணமாகவே ரோப்காரில் செல்ல சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம்காட்டுகின்றனர். எனவே விடுமுறை நாட்களில் ரோப்கார் ஸ்டேஷனில் மட்டும் 2 மணிநேரம் முதல் 3மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பழநி மலைக்கோயில் அழகை ரசிக்கும் வகையில் கோயில் சார்பாக விதவிதமான நீர்வீழ்ச்சிகள், இரண்டு செயற்கை அருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக ரோப்கார் ஸ்டேஷன் அருகே பசுமையான புல்வெளியில் மினி ஜூ அமைக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள், மயில்கள், பசுக்கள், ஒட்டகச்சிவிங்கி, கொக்கு உள்ளிட்டவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, காண்போரை கவரும் வகையில் உள்ளது. ரோப்காருக்காக காத்திருக்கும் பக்தர்கள் இதனை கண்டுரசிப்பதால் அவர்களுக்கு நேரம்போவதே தெரிவது இல்லை. குடும்பத்துடன் வரும் பக்தர்கள் செல்பி மற்றும் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். 2011 - 2012ம் ஆண்டில் ரூ. 3 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரம் ரோப்கார் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. இதேபோல ஒவ்வொரு ஆண்டும் ரூ.பலகோடி கோயில் நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கிறது.
உலகத்தரத்தில் 2வது திட்டம்: தற்போது ரோப்காருக்கு பக்தர்களிடம் நல்லவரவேற்பு உள்ளதால், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் மற்றொரு ரோப்கார் நிறுவும் திட்டமும் உள்ளது. தற்போதுள்ள அமைப்பின் அருகிலேயே இரண்டாவது திட்டத்தை ரூ.பலகோடி செலவில் நிறுவ ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக மின்வாரிய தலைமை பொறியாளர், பழநி கோயில் இணை கமிஷனர், நிர்வாக பொறியாளர் ,ரோப்கார் நிபுணர், திண்டுக்கல் மாவட்ட மின் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் ஆஸ்திரியா, இத்தாலி, கோல்கட்டா, டில்லியைச் சேர்ந்த ரோப்வே தனியார் கம்பெனிகளின் வல்லுனர் குழுவுடன் ஆலோசனை செய்து உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் வெளிநாட்டு புதிய தொழிற் நுட்பத்தில் 2வது ரோப்கார் பயணம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.-