உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்பையை அழகுபடுத்த ரூ.99 கோடியில் திட்டம்

பம்பையை அழகுபடுத்த ரூ.99 கோடியில் திட்டம்

சபரிமலை: மத்திய அரசு ஒதுக்கிய, 99 கோடி ரூபாய், பம்பையை அழகுபடுத்த பயன்படுத்தப்படும், என, சபரிமலை உயர் அதிகாரி கள் குழு தலைவரும், அரசின் முன்னாள் தலைமை செயலருமான ஜெயக்குமார் கூறினார். சபரிமலையில் அவர் கூறியதாவது: சன்னிதானத்தில் உள்ள புதிய அன்னதான மண்டபம் சிறப்பாக செயல்படுகிறது. தற்போது, 27 ஆயிரம் சதுர அடி கட்டடம் உள்ளது. இரண்டாம் தளம் கட்டப்பட்டால், 70 ஆயிரம் சதுர அடி இடம் கிடைக்கும். ஒரே நேரத்தில், 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியும்.

அன்னதானம் : ஒரு நாளில், ஒன்றரை லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியும். வரும் சித்திரை விஷூவுக்கு முன், அன்னதான மண்டபம் முழு அளவில் தயார் ஆகும். பிளாஸ்டிக், பாலிதீனுக்கு எதிரான நிலையை பக்தர்கள் வரவேற்கின்றனர். இங்கு சிறப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பக்தர்கள் பிளாஸ்டிக், பாலிதீன் பை பயன்படுத்தாத நிலையை ஏற்படுத்த முடியும். மத்திய சுற்றுலாத்துறை வழங்கிய, 99 கோடி ரூபாய், பம்பையை அழகுபடுத்த பயன்படுத்தப்படும். பக்தர்கள், பம்பையில் குளிக்கும் முன், ஷவரில் குளிக்க ஏற்பாடு செய்யப்படும். உடலை சுத்தம் செய்த பிறகே பக்தர்கள், பம்பையில் இறங்க முடியும். பம்பை நதியில், மனித கழிவுகள் கலக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படும்.

பயோ காஸ் : பம்பை, சன்னிதானத்தில் கழிவுகளில் இருந்து, பயோ காஸ் உற்பத்தி செய்யும் கருவிகள் நிறுவப்படும். சன்னிதானத்தை போல பம்பையிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்படும். தனியார் ஒருவர் நன்கொடையாக கொடுத்த, அரவணை தயாரிப்பு இயந்திரத்தை அமைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதய நோய்க்கு 13 சதவீதம் பேர் சிகிச்சை : சபரிமலை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில், 13 சதவீதம் பேர் இதய நோய் தொடர்பானவர்கள், என, சன்னிதானம் மருத்துவ அதிகாரி, டாக்டர் சுரேஷ் பாபு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த சீசனில், டிச., 12 வரை, சபரிமலை மருத்துவமனைகளில், 90 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 13 சதவீதம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெற்றனர். 76 பேர் மாரடைப்புக்கும், 113 பேர் மாரடைப்பு அறிகுறிகளுக்காகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். டிச., 14 வரை, 15 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். இதில், எட்டு பேர், அப்பாச்சிமேடு மற்றும் சபரிபீடத்தில் இறந்தனர். இவர்கள் பெரும்பாலும், 40 - 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இதனால், பக்தர்கள் வரும் பாதையில் இளைப்பாற வசதிகள் செய்ய வேண்டும் என தேவசம் போர்டிடம் வலியுறுத்தி உள்ளோம். இதய நோய் அறிகுறி உள்ளவர்கள், டாக்டர்களின் ஆலோசனைக்கு பின், சபரிமலை பயணம் பற்றி முடிவு செய்ய வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதற்கான மருந்து சாப்பிடுபவர்கள் கட்டாயமாக பயணத்தின் போதும், தொடர்ந்து சாப்பிட வேண்டும்; விரதம் என்ற பெயரில், மருந்துகளை நிறுத்தக் கூடாது.ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மலை ஏறும் போது உடல் தளர்ச்சி ஏற்படுவதாக நினைத்தால், தொடர்ந்து பயணம் செய்யக் கூடாது. உடனடியாக மருத்துவ உதவி மையங்களை நாட வேண்டும். சிகிச்சை பெறுபவர்கள் அவர்கள் சாப்பிடும் மருந்து சீட்டு மற்றும் டாக்டர்களின் குறிப்புகளை கூடவே எடுத்து வருவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !