கச்சத்தீவில் இன்று ஆலய திறப்பு விழா : தமிழகத்தைச் சேர்ந்த 82 பேர் பங்கேற்பு
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்தோணியார் ஆலய திறப்பு விழா இன்று நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 82 பேர் படகுகளில் கச்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆலய திறப்பு விழா : கச்சத்தீவில் இலங்கை அரசால் ரூ.1 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா இன்று (டிசம்பர் 23) காலை 9 மணியளவில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகள் மூலம் 82 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதேபோல், இலங்கையில் இருந்து சுமார் 100 பேர் விழாவில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. விழாவில் பங்கேற்பது குறித்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், இது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். ஆலயத் திறப்பு விழா முடிந்ததும் சுமார் 1 மணியளவில் தமிழக மக்கள் மீண்டும் கச்சத்தீவிலிருந்து புறப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இலங்கை வரவேற்பு : கச்சத்தீவு அந்தோணியர் ஆலய விழாவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது வரவேற்கதக்கது எனவும் இலங்கை துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.