திருமலையில் இலங்கை பிரதமர் தரிசனம்
திருப்பதி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, திருமலையில், தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டார். ஏழுமலையானை வழிபட, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தன் மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை, திருப்பதி, திருமலைக்கு வந்தார். இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக, தன் மனைவி மற்றும் இலங்கை அமைச்சர்களுடன் ஏழுமலையானை தரிசிக்க சென்றார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சிறப்பு பிரசாதம் வழங்கினர். இதன்பின், ரணில் கூறியதாவது: ஏழுமலையான் தரிசனம் மனதிற்கு அமைதியை தருமென அனைவரும் கூறியதால் வந்தேன். தேவஸ்தானம் புதிதாக துவங்க உள்ள, எஸ்.வி.பி.சி., தமிழ் தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள, தமிழ் மக்கள், ஏழுமலையானுக்கு நடக்கும் தினசரி ஆர்ஜித சேவைகள், இதர உற்சவங்களை, தங்கள் வீட்டிலிருந்தே பார்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.