உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தனுக்கு அரோகரா கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்

கந்தனுக்கு அரோகரா கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்

திருப்பூர் : சிவன்மலை, கதித்தமலை, கொங்ககிரி, மலைக்கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், தைப்பூசத் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது; பக்தர்கள், சாமி தரிசித்து வழிபட்டனர். காங்கயம் சிவன்மலையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம், திருக்கல்யா உற்சவம் நடந்தது.நேற்று அதிகாலை சுவாமிக்கு, பல்வேறு வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், வள்ளி தெய்வானையுடன், சுப்ரமணியர் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை, 4:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயந்தி, எஸ்.பி., உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், வீதிகளில் திருத்தேர் அசைந்தாடி வந்தது.தேரோட்டத்தின் முதல் நாளான நேற்று, முதல் நிலையில் தேர் நிறுத்தப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடந்தது. இன்றும், நாளையும், மாலை, 4:00 மணிக்கு, பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துவரப்பட்டு, திருத்தேர் மலையை சுற்றி வரும்.

ஊத்துக்குளி அருகே கதித்தமலையில் உள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில், சுவாமி எழுந்தருளினார். அதிர்வேட்டும், பம்பை, உடுக்கை என பாரம்பரிய இசை முழங்க, அடிவாரத்தின் கீழ், திருத்தேர் தேரோட்டம் நடந்தது. இன்று பரிவேட்டை, நாளை தெப்பத்தேர் உலா நடக்கிறது. மலை மீது தேரோடும் சிறப்பு பெற்ற இக்கோவிலில், வரும், 13ல், மலை மீது தேரோட்டம் நடக்கிறது. மங்கலம் அருகே, மலைக்கோவில் ஸ்ரீ குழந்தைவேலாயுதசாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவில், நேற்று காலை, சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். மாலை, திருத்தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருப்பூர், காலேஜ் ரோடு கொங்ககிரி கந்தபெருமான் கோவில், தைப்பூசவிழாவை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் திருத்தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. கருமத்தம்பட்டி, விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், தைப் பூசத் தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து, திருத்தேரில் சுவாமி எழுந்தருள் நடந்தது. நேற்று மாலை, பக்தர்களின் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளிதேவநாயகி உடனமர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா நடந்தது.காலை சுவாமிக்கு மகாஅபிஷேகம் மற்றும் திருக்கல்யா உற்சவம் நடந்து.புதிதாக அமைக்கப்பட்ட தேரில், சுவாமி எழுந்தருளி, நான்கு ரத வீதிகளிம் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை, குட்டீஸ் குதூகலத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !