சூலக்கல் மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜை
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி அருகே சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை ஒட்டி, மாரியம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று அமாவாசையை ஒட்டி காலை, 7:30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் உட்பட, 30 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு, சுயம்பு மாரியம்மனுக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு மஞ்சள் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. அம்பராம்பாளையம் ஆற்றில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.