கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மனுக்கு திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று நடந்த திருக்கல்யாணத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து, மயான கொள்ளை திருவிழா நடந்தது. பின், அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து, அம்மனுக்கு தாலாட்டும், விடாக்கஞ்சி ஊற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து நடந்த தீ மிதிக்கும் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. பின், அம்மனுக்கு நடந்த கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.