கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் மொரீஷியஸ் நாட்டினர் தரிசனம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் உள்ள தேரை, மொரீஷியஸ் நாட்டினர் வணங்கினர். ஆப்பிரிக்க கண்டத்திற்கு, தென் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு மொரீஷியஸ். இந்நாட்டில் உள்ள ஐ லேண்ட் என்ற இடத்தை சேர்ந்த திருமால் சண்முகம் பிள்ளை என்பவர், தன் குடும்ப உறுப்பினர்கள், ஆறு பேருடன் கடந்த, 4ல் சென்னை வந்தார். அங்கிருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அவர், பெங்களூரு இஸ்கான் கோவில், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் ஆகியவற்றுக்கு சென்று விட்டு, நேற்று காலை, ஓசூர் அடுத்த மோர்னப்பள்ளியில் உள்ள பிருத்யங்கிராதேவி கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஓசூர் தேர்ப்பேட்டைக்கு வந்த, அவரது குடும்பத்தினர் கல்யாண சூடேஸ்வரர் கோவில் அருகே, தேர்த்திருவிழா முடிந்து நிறுத்தப்பட்டிருந்த தேரை பார்வையிட்டு, உப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு வணங்கினர். அத்துடன், கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் இருந்த, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தேர்ப்பேட்டை தெப்பக்குள கரையில் உள்ள பத்ர காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்தவாறு, மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலை பார்த்து வணங்கினர். பின், அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று விட்டு, திருப்பதி செல்வதாக தெரிவித்தனர்.