பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் தட்சணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தாம்பத்ய தட்சணாமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். இங்கு, உலகை காப்பதற்காக, சிவபெருமான், ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை சர்வமங்களா மடி மீது தலைவைத்து உறக்கத்தில் உள்ளது போன்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு, சுவாமியின் பெயர் பள்ளிகொண்டீஸ்வரர். பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில், தாம்பத்ய தட்சணாமூர்த்தி சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில், தட்சணாமூர்த்தி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், இங்கு, சுவாமி தன் மனைவி கவுரியை அணைத்தபடி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கொண்டை கடலையை மாலையாக சுவாமிக்கு அணிவித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.