உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னம்பலமேட்டில் கோயில் பந்தள மன்னர் குடும்பம் எதிர்ப்பு

பொன்னம்பலமேட்டில் கோயில் பந்தள மன்னர் குடும்பம் எதிர்ப்பு

சபரிமலை, : பொன்னம்பலமேட்டில் கோயில் கட்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் முடிவுக்கு மாநில தேவசம்போர்டு அமைச்சர், பந்தளம் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகரசங்கரம தினத்தில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். இந்த இடத்தில் தர்ம சாஸ்தா கோயில் கட்ட தேவசம்போர்டு முடிவு செய்து மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறியதாவது, மாநில வனத்துறையிடம் தெரிவிக்காமல், தேவசம்போர்டு எப்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என்று தெரியவில்லை. இது தொடர்பாக தேவசம்போர்டு தரப்பில் இருந்து அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, என்றார்.

தேவசம்போர்டு மா.கம்யூ., உறுப்பினர் ராகவன் கூறியதாவது: பொன்னம்பலமேட்டில் கோயில் கட்டுவது தொடர்பாக போர்டு கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மகரவிளக்கு நாளில் பொன்னம்பலமேட்டில் ஆட்களை அனுப்புவதை கூட அனுமதிக்காத வனத்துறை அங்கு எப்படி கோயில் கட்ட அனுமதிக்கப் போகிறது, என்றார்.பொன்னம்பல மேட்டில் கோயில் கட்டுவதை ஏற்க முடியாது, என பந்தளம் அரண்மனை நிர்வாகக்குழு கூறியுள்ளது.இந்த முடிவுடன் ஒத்து போக முடியாது, காடுகளில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதை அனுமதிக்க முடியாது, என நிர்வாகக்குழு தலைவர் சசிகுமார் வர்மா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !