என்றும் வாழும் தியாகிகள்
இயேசுகிறிஸ்து தன் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை. ஆனால், உலகின் தலை சிறந்த ஓவியர்களான ரபேல், மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ ஆகிய தலைசிறந்த ஓவியர்களெல்லாம், அவரது வாழ்க்கைச் சரிதத்தை ஓவியமாக வடித்துள்ளனர். அவரது அன்பு முகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். பலரும் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவருடைய வாழ்க்கை சரித்திரத்தைப் படமாகவும், ஓவியமாகவும், சிற்பங்களாகவும் செதுக்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் அவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுதியிருக்கிறார்கள். இயேசு கவிதை ஒன்றும் எழுதவில்லை. ஆனால், உலகத்தின் பிரபல கவிஞர்களான மில்டன், டேன்டே ஆகியோரெல்லாம் அவரைப் பற்றி கவிதை மழை பொழிந்திருக்கின்றனர். கிறிஸ்து சங்கீத வித்வான் அல்ல, இசைஞானி அல்ல. ஆனாலும், மிகச்சிறந்த பாடகர்களெல்லாம் அவரது புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர் அன்பானவர். பிறருக்காக தன் உயிரை இழந்த தியாகசீலர். தியாகிகள் என்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு படிப்பில்லை என்றாலும், பணமில்லை என்றாலும் அவர்கள் உலகத்தால் பாராட்டப்படவே செய்கிறார்கள்.