சபரிமலை ஆறாட்டு விழா: யானை மீது சுவாமி வலம்
சபரிமலை: சபரிமலையில் நடந்து வரும் ஆறாட்டு திருவிழாவில், யானை மீது சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பம்பையில் ஆறாட்டு நடக்கிறது. சபரிமலையில் புதிய தங்க கொடிமர கும்பாபிஷேகம் ஜூன் 25-ம் தேதி நடந்தது. பின்னர் ஆறாட்டு திருவிழா ஜூன் 28-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் இரவு 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலியும், ஐந்தாம் நாள் முதல், யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ௨ம் நாள் விழா முதல் மதியம் 12:00 மணிக்கு உற்சவபலி நடக்கிறது. 9ம் நாள் விழாவான நாளை இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர், சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். நள்ளிரவில் பள்ளி வேட்டை முடிந்த பின்னர் சன்னிதானம் திரும்பும் சுவாமி, கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடக்கும். நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை கோயிலுக்குள் பூஜிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் நெய்யபிஷேகம் நடைபெறும். காலை ஏழு மணிக்கு உஷபூஜைக்கு பின் யானை மீது சுவாமி ஏற்றப்பட்டு, ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்படும். மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். மதியம் மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்படும். இரவு 10:00 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி விழா நிறைவு பெறும். அத்துடன் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் ஆடி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். 17-ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.