கவுமாரியம்மன் கோயில் திருவிழா: கம்பம் நடும் நிகழ்ச்சி
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது. தேனி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற வீரபாண்டி மாரியம்மன் திருவிழா வரிசையில், கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா முக்கியத்துவம் பெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்தவாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜூலை 10ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. முன்னதாக கம்பம் நட்டு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பூஜாரி அழைப்பு: கம்பம் நட்டு சாட்டுதல் நிகழ்ச்சிக்காக கோயில் அமைந்துள்ள தென்கரையிலிருந்து, வடகரை வரதப்பர் தெருவில் பூஜாரி வீட்டிற்கு, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர். அவரது வீட்டில் கம்பத்திற்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, நகரின் முக்கிய வீதி வழியாக துாக்கி வந்து, கோயில் வளாகம் முன் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். சாட்டுதலின் போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி , மண்டகப்படிதாரர்கள் செய்தனர்.