உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஸ்வமேத யாகத்துக்கு தயாரா?

அஸ்வமேத யாகத்துக்கு தயாரா?

அந்தக் காலத்தில் குதிரைப் பந்தயத்தில் செல்வத்தைக் கோட்டை விட்டவர்கள் பலர் உண்டு. புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களைக் கண்டித்த காஞ்சி மகாபபெரியவர், குதிரைப் பந்தயம் சூதாட்டம் என்றும், அதில் ஈடுபடலாகாது என்றும் அறிவுறுத்தி வந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாண்டவர்களும் நளனும் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை விளக்குவார். மகாபாரதம் சொல்லும் நீதிகளில் முக்கியமானது, சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதுதான் என்பார். குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுபவர்களை அஸ்வமேத யாகம் செய்பவர்கள் எனக் கிண்டலாகச் சொல்லும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. அஸ்வம் என்றால் குதிரை. ஒருநாள் காஞ்சி மடத்திற்கு வந்தார் கும்பகோணம் ஆயுர்வேத வைத்தியர் லட்சுமிகாந்த சர்மா. பெரியவரிடம் அவருக்கு அளவு கடந்த பக்தி. பெரியவர் சொன்னால் அது தான் அவரது வேதம்.  அன்று பலர் முன்னிலையில் திடீரென்று பெரியவர் அவரிடம் என்ன.. அஸ்வமேத யாகம் தொடர்ந்து நடைபெறுகிறதா? என்று கேட்டார்.

பக்தர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சர்மா மிக நல்லவராயிற்றே? பெரியவர் இப்படிக் கேட்கிறார் என்றால் அவர் குதிரைப் பந்தயத்திற்குப் போகும் பழக்கம் உடையவரா என்ன?  அடுத்து சுவாமிகளுக்கு சர்மா சொன்ன பதில், அவர்களின் திகைப்பை அதிகப்படுத்தியது. சர்மா பவ்யமாகத் தெரிவித்தார்:தாங்கள் சொன்னபடி தொடர்ந்து என்னால் இயன்ற அளவு அஸ்வமேத யாகம் செய்து வருகிறேன்!  அன்பர்களின் திகைப்பைப் பார்த்த பெரியவர் கலகலவெனச் சிரித்தவாறே சர்மா மிக நல்லவர். சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என விரும்பினார். அனாதைப் பிரேத சம்ஸ்காரம் மிக நல்ல புண்ணியச்செயல் என அவருக்கு அறிவுறுத்தினேன். கேட்பாரில்லாத சடலங்களை சட்டப்படி கேட்டு வாங்கி, உரிய வகையில் இறுதிச் சடங்கு செய்து அவர்களின் ஆன்மாவை அமைதி பெற செய் என்றேன். இது அஸ்வமேத யாகம் செய்வதற்குச் சமமான புண்ணியத்தைத் தரக் கூடியது. நான் சொன்ன நாளிலிருந்து கர்ம சிரத்தையாக அதைத் தொடர்ந்து செய்து வருகிறார் சர்மா. அதைத்தான் அஸ்வமேத யாகம் நடக்கிறதா என்று கேட்டேன்! என்றார். பெரியவரின் விளக்கம் கேட்ட பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள். நாமும் பெரியவர் சொன்னபடி அஸ்வமேத யாகத்திற்கு தயாராவோம் தானே!.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !