திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழா, திருப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன், நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும், பிற கோவில்களில் <உள்ள விநாயகர் சன்னதியிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அதை தொடர்ந்து நடந்த அன்னதானம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். டவுன் ஹால் செல்வ விநாயகர் கோவில், குலாலர் பிள்ளையார் கோவில், செரீப் காலனி சித்தி விநாயகர், ஜான்ஜோதி கார்டன் செல்வ விநாயகர், எஸ்.ஆர்., நகர் நவக்கிரக விநாயகர்,
கருவம்பாளையம் மேற்கு விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி வலம்புரி ரத்தின விநாயகர், ராயபுரம் ராஜ விநாயகர், மண்ணரை செல்வ விநாயகர்; டிமாண்ட் வீதி சித்தி விநாயகர், கோர்ட் வளாகம் நீதி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சதுர்த்தி விழா பூஜைகளில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை பால தண்டாயுதபாணி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி வட்டார கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதுதவிர, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும், விநாயகர் சிலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை வீடுகளில் அலங்கரித்து வைத்து, பொதுமக்கள் வழிபட்டனர்.
இந்து முன்னணி: இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ, ஐந்தாயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று அடி முதல், 11 அடி வரை உயரமுள்ள சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மெர்சல் விநாயகர், ஜல்லிக்கட்டு காளை மீது அமர்ந்துள்ள விநாயகர்; சிம்ம வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், மான் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மீதமர்ந்தவாறு அருள் பாலிக்கும் விநாயகர் சிலைகள், பக்தர்களை வெகுவாக ஈர்த்தன. ராமமூர்த்தி நகரில், பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 28ம் தேதி விசர்ஜன ஊர்வலம், ஆலாங்காட்டில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.