திருப்பதி சுவாமிகள் 80வது ஆண்டு குருபூஜை: வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு
குளித்தலை: குளித்தலை, கடம்பர்கோவில் திருப்பதிசுவாமிகள், 80வது ஆண்டு குரு பூஜை மற்றும் புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. குளித்தலை, கடம்பர்கோவில் அருகில், திருப்பதி சுவாமிகள் மடம் உள்ளது. இதில், திருப்பதி சுவாமிகள், 80வது ஆண்டு குருபூஜை விழா, நேற்று காலை, 10:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, மகேஸ்வரபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மதியம், 2:00 மணியளவில், திருப்பதி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நடந்தது. ராஜசேகர தங்கமணி எழுதிய நூலை, தென்னிந்திய வரலற்றாய்வுக் கழக தலைவர் அம்பலத்தரசு வெளியிட்டார். வக்கீல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். ஆன்மிக பிரமுகர்கள், திருப்பதிசுவாமிகள் சன்மார்க்க சங்க பொறுப்பாளர்கள், தென்னிந்திய வரலாற்று ஆய்வுக்கழக பொறுப்பாளர்கள், கரூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மடம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.