உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு: புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா

பொள்ளாச்சி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு: புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. இதில், பக்தர்கள் மத்தியில், புஷ்ப பல்லக்கில் நடராஜர், சிவகாமி அம்மனும் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிவகாமி அம்மன் திருஊஞ்சல் உற்சவம், திருமாங்கல்ய நோன்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்,ஆராதனை நடந்தது. காலை, 8:30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும்; சிவகாமி அம்மையுடன், நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில், பட்டி விநாயகரை, 11 முறை சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடந்தது.

தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக புஷ்ப பல்லக்கில் திருவீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை, 6:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடக்கிறது. இதுபோன்று, பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நெகமம்: பொள்ளாச்சி அடுத்துள்ள, நெகமம் கடைவீதியில், 700 ஆண்டுகள் பழமையான நித்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை, நித்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, நெகமம் வீதிகளில் பக்தர்கள் சூழ, நித்தீஸ்வரர் திருவீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெகமம் அமணலிங்கேஸ்வர் கோவில், காட்டம்பட்டி, வடசித்துாரிலுள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன வழிபாட்டில், நடராஜர், சிவலோகநாயகி உற்சவ சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. இதில், அனைத்து வகையான கனிகள் மற்றும், 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின், நடராஜர், சிவலோகநாயகி சிலைகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசனம் காலை, 7:30 மணியளவில் தீபராதணை நடந்தது. சுமங்கலி விரதம் இருந்த பெண்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சிவலோகநாதரையும், சிவலோகநாயகியையும் வழிபட்டனர். வழிபாட்டுக்கு பின், பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு, எஸ்.என்.எம்.பி., நகர் சோற்றுத்துரைநாதர், மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !