திருப்பூர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: பக்தர்கள் பரவசம்
திருப்பூர் :அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடல் வல்லானுக்கு, 32 திரவியங்களில், நேற்று அபிஷேகம் நடந்தது. திருப்பூர் பகுதி சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் கண்டு, பக்தர்கள் வழிபட்டனர்.சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த, டிச., 24ல் துவங்கியது. திருவாதிரை திருநாள் மற்றும் திருக்கல்யாணம், நேற்று முன்தினம் நடந்தது. நேற்று, ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, அவிநாசிலிங்ேகஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00க்கு, நடராஜ பெருமான் மற்றும் சிவகாமியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், திருநீறு, தேன், நெய் மற்றும் ஆரஞ்சு, சாத்துக்குடி, முலாம்பழம், கொய்யாப்பழம் என, 15 வகை பழங்கள்; 32 திரவியங்களில் மகா அபிஷேகம் நடந்தது. மூன்று மணி நேர அபிஷேகத்தை தொடர்ந்து, தாமரை விதை, வெட்டி வேர், விருச்ச பூ என, 12 வகை மலர் மாலைகள் சூடி, நடராஜ பெருமான், ஆருத்ரா தரிசன காட்சியளித்தார். தொடர்ந்து, சிவகாமியம்மனுடன் எழுந்தருளி, பட்டி சுற்றி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.
l திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று காலை நடராஜருக்கு, 16 திரவியங்களில் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான், சிவகாமியம்மனுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் வழங்கினார். சப்பரத்தில் எழுந்தருளி, பட்டி விநாயகரை சுற்றினார். தேர் வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார்.
l நடுச்சிதம்பரம் என்ற சிறப்பு பெற்ற, சேவூர் வாலீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பலவகை திரவியங்களால், நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.