உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாவுக்கரசர் கோவில் தலவிருட்சம் மீட்டெடுக்க நடவடிக்கை தேவை

திருநாவுக்கரசர் கோவில் தலவிருட்சம் மீட்டெடுக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம் : திருவாமூர் திருநாவுக்கரசர் கோவிலில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான களர் உகாய் மரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி அடுத்த திருவாமூரில் 7ம் நுாற்றாண்டில் திருநாவுக்கரசர் நாயன்மார் பிறந்த வீட்டிலிருந்த களர் உகாய் மரத்தின் இலைகள் 6 சுவைகளை உடையது. தீராத வயிற்று வலி உடையவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த மரம் கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. இம்மரம் கடந்த 2011ல் வீசிய தானே புயலில் அருகிலுள்ள சுவற்றின்மீது சாய்ந்தும், தண்டுப்பகுதி சேதமடைந்துள்ளது. இதற்கு ஊர்மக்கள் மரக்கிளைகளை முட்டுக்கொடுத்துள்ளனர். 1,400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரம் என்பதால் மரத்தை மீட்டெடுக்க, அப்பகுதியினர் மரத்தின் ஒரு கிளையை பதியம் போட்டு முயற்சி செய்துள்ளனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காததால் அப்பகுதியினர் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., கோவில்களிலுள்ள பழமையான தலவிருட்சங்களை அழிவிலிருந்து மீட்க பதியம் போட்டோ அல்லது மரபணு மூலமாகவோ மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மூலமாகவோ அல்லது கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகளைக் கொண்டு 1,400 ஆண்டுகள் பழமையான களர் உகாய் மரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !