உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப்பிடித்து எரிந்த கோவில் தேர்கள்: பரிகாரமாக வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு!

தீப்பிடித்து எரிந்த கோவில் தேர்கள்: பரிகாரமாக வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு!

வேலூர்: சத்துவாச்சாரியில், இரண்டு கோவில் தேர்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், சத்துவாச்சாரியில், பிரசித்திப் பெற்ற சாலை கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா நடக்கும். இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.   

இந்த கோவிலுக்கு சொந்தமான, தேக்கு மரத்தினால் ஆன தேர் கடந்தாண்டு, 50 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டது. கோவில் அருகே நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் போது இந்த தேரில் சுவாமி திருவீதி உலா வரும்.    இந்த தேரின் அருகில், சத்துவாச்சாரி பொன்னியம்மன்  கோவிலுக்கு சொந்தமான சிறிய தேரும் நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு தேர்களும் ஓலை, பலகையால் மூடப்பட்டிருந்தது.  இந்நிலையில், இன்று  அதிகாலை, 3:00 மணிக்கு, இரண்டு தேர்களும் திடிரென தீப்பிடித்து எரிந்தன. வேலூர் தீயணைக்கும் துறையினர், பொது மக்கள், போலீசார்  சேர்ந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. வேலூர்  தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.   

நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு இளைஞர்கள் சிலர் பைக்கில் வந்து தேருக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு  மொபைல் போனில் தகவல் வந்த பிறகு, இரண்டு தேருக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்றதாகம், சத்துவாச்சாரி போலீசார் நடத்திய  விசாரணையில் தெரியவந்தது. தேருக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி மாவட்ட  தலைவர் மகேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:  மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சமூக விரோதிகள் தீ  வைத்தனர். அது போல இங்குள்ள தேர்களுக்கும் சமூக விரோதிகள் தான் தீ வைத்துள்ளனர்.  எனவே, வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள  அனைத்து இந்து கோவில்களுக்கும், தேர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினர்.   இரண்டு தேர்கள் தீயில்  எரிந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்களுக்கும் தீ வைக்கப்பட்டது அபசகுணமாக பக்தர்கள் கருதுவதால், தங்கள்  வீடுகளின் முன் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !