பண்ணாரியம்மன் கோவிலில் 1 லட்சம் சதுர அடியில் பந்தல்
சத்தியமங்கலம்: பண்ணாரி குண்டம் விழாவுக்காக, கோவில் வளாகத்தில், ஒரு லட்சம் சதுர அடியில், பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. சத்தியமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, கோவில்களில் ஒன்றாகும். இங்கு பங்குனி மாதத்தில் நடக்கும் குண்டம் விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநில பக்தர்களும் வருவார்கள்.நடப்பாண்டு விழா வரும், 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம், சுற்று வட்டார கிராமங்களில் திருவீதியுலா செல்லும். 27ல், இரவு கம்பம் சாட்டும் நிகழ்ச்சி, ஏப்.,3ல் அதிகாலை, 4:00 மணிக்கு தீ மிதிக்கும் நிகழ்வு நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக, ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், தீப்பிடிக்காத தகர சீட்டில், பந்தல் அமைக்கும் பணி, நேற்று தொடங்கியது. பக்தர்கள் வரிசையாக நின்று, குண்டம் இறங்க ஏதுவாக, 20 கி.மீ., சுற்றளவுக்கு தடுப்புக்குச்சி அமைக்கவுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.