பஞ்ச பாண்டவர் கோவிலில் திள்ளி விழா சிறப்பு பூஜை
கோத்தகிரி:கோத்தகிரி கோடநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள், பஞ்சபாண்டவர் கோவிலில், திள்ளி திருவிழாவை நடத்தினர்.கோடநாடு மந்து பகுதியில் இருந்து, இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சபாண்டவர் கோவில். இக்கோவிலில், ஜனவரி மாதத்தில், தோடரின மக்கள், திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக, கோவிலில், புனரமைப்பு பணிகள் நடந்துவந்தன. இப்பணி நிறைவடைந்த நிலையில், தற்போது திருவிழா கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து காலையில், கால்நடைகளுக்கு நடத்தப்படும் திள்ளி எனப்படும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், கோடநாடு மந்து உட்பட, 14 தோடர் கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில், கிராமத்தில் அமைந்துள்ள தொழுவத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள கல்துாணை செங்குத்தாக நிறுத்தும் பூஜை நடந்தது.
தொடர்ந்து, கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சி இடம் பெற்றது. மேலும், தோடரின மக்களுக்கே உரித்தான பாரம்பரிய நடனமாடி, பஞ்சபாண்டவருக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பால்சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, எருமைகள் அழைத்துவரப்பட்டு, திள்ளி கல் அமைக்கப்பட்ட தொழுவத்தில் அடைத்து, அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோடநாடு மந்து தலைவர் கொச்சாடு குட்டன் தலைமையில் பலர் செய்திருந்தனர்.